டிப்ளமோ என்ஜினீயருக்கு சான்றிதழ்; நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை

டிப்ளமோ என்ஜினீயருக்கு நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் சான்றிதழ் கிடைத்தது.

Update: 2022-06-01 19:13 GMT

நெல்லை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இலத்தூர் திருவெற்றியூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி மகன் சுரேஷ்குமார். இவர் கடந்த மாதம் 22-ந்தேதி நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நெல்லை அருகே மேல திடியூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தேன். கல்லூரியில் சேரும்போது டியூசன் கட்டணம் தேவையில்லை, தனக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித்தொகையை கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொள்வதாக கூறினர். ஆனால் கடந்த ஆண்டு படிப்பை முடித்த பிறகு சான்றிதழ்களை கொடுக்கவில்லை. எனவே சான்றிதழ்களை பெற்று தருமாறு கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீனா உத்தரவுபடி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அதிகாரி ஆஜரானார். அப்போது சுரேஷ்குமாருக்கு கல்லூரி நிர்வாகம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதளத்தில் தவறாக பதிவு செய்ததாகவும், கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் அளித்தார்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவருக்கு உரிய அனைத்து சான்றிதழ்களையும் கோர்ட்டில் ஒப்படைத்தது. இதையடுத்து நீதிபதி சமீனா சான்றிதழ்களை மாணவருக்கு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்