நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் தொற்று 20 சதவீதம் குறைந்தது பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் தொற்று 20 சதவீதம் குறைந்ததை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் தொற்று 20 சதவீதம் குறைந்ததை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
20 சதவீதம் குறைவு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காசநோய் இல்லா தமிழ்நாடு-2025 என்ற இலக்கின்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தலின்படி, காசநோய் இல்லா நாமக்கல்-2025 என்ற திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்புத்திட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காசநோய் பிரிவானது 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மாவட்ட அளவிலான காசநோய் துறையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து 20 சதவீதம் நோய் தொற்று குறைந்ததற்காக வெண்கல பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கான பாராட்டுச் சான்றிதழை துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவனிடம் வழங்கினார். மேலும் காசநோய் கண்டுபிடிப்பு பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு அதிநவீன நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனமும் முதல்-அமைச்சரால் நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் வாழ்த்து
நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்கு அரசு வழங்கி வரும் உதவியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஊட்டச்சத்து மாவு மற்றும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களின் செயலை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம், துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் காண்பித்து வாழ்த்துப்பெற்றார்.