மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் மின்ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குரோடு அருகே உள்ள மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். கள உதவியாளர் உள்ளிட்ட 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அகவிலைப்படி மற்றும் தற்காலிக பணியாளர்கள் (எஸ்.எல்.எஸ்.) பெற்றுவந்த சலுகைகளை உடனே வழங்க வேண்டும். அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் கழிவறைகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.