மத்திய மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில், மத்திய மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் உள்ள கோவில் விடுதியில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை பழனி முருகன் கோவிலுக்கு சென்று விளா பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் முருகப்பெருமானை வழிபட்டு உட்பிரகாரத்தை சுற்றி வந்தார். இதையடுத்து போகர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் வெளிப்பிரகாரம் சுற்றி வந்து முதலுதவி மையம் அருகே சிறிது நேரம் தரையில் அமர்ந்திருந்தார். அவருடன் கட்சியினரும் உடன் இருந்தனர். பின்னர் ரோப்கார் வழியாக அடிவாரம் வந்தார்.
இதைத்தொடர்ந்து வடக்கு கிரிவீதியில் உள்ள தனியார் ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது கட்சியினர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே பழனியில் உள்ள தனியார் ஆசிரமத்தில் எல்.முருகன் சிறப்பு யாகம் செய்து வழிபட்டதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.