மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா, பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நெமிலி வட்டாரத்தில் இயக்கம் தொடங்கி 25-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். உத்தமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார்.
பின்பு பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் பிரகாசம், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, விநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.