ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை திருச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என்று திருச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

Update: 2023-01-20 12:47 GMT

பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என்று திருச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

பணிநியமன ஆணை வழங்கும் விழா

இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் பிரதம மந்திரி ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 3-ம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 129 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு ரெயில்வே, சுங்கத்துறை, கலால்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்கட்டமாக 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றியபோது, இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி 75 ஆயிரம் பேருக்கும், அதன்பின்னர் நவம்பர் மாதம் 22-ந் தேதி 71 ஆயிரம் பேருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து இன்றைய தினம் 3-வது கட்டமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் பணி ஆணைகளை வழங்கியுள்ளார். அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் 1½ லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் முகாமை பிரதமர் தொடங்கி வைத்தார். தற்போது புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

2047-ம் ஆண்டு வல்லரசு

2047-ம் ஆண்டில் நாடு மிகப்பெரிய வல்லரசாக திகழவும், சுயசார்புடன் இருக்கவும், புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள இந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஜானே நாதனியன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்றார். இதில் சுங்கம், கலால், வணிக வரித்துறை, ரெயில்வே உள்ளிட்ட பல்வேறுத்துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை ஆணையர் பிரதீப் நன்றி கூறினார்.

சமயபுரத்தில் தரிசனம்

இதைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி எல். முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் கல்யாணி பிரசாதம் மற்றும் அம்மன் படத்தை வழங்கி வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்