96 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணை
கோவையில் நடந்த விழாவில் 96 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணையை மத்திய மந்திரி நாராயணசாமி வழங்கினார்.
கோவையில் நடந்த விழாவில் 96 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணையை மத்திய மந்திரி நாராயணசாமி வழங்கினார்.
மத்திய அரசு பணி
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகிய வற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் ஆகியவை மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி இதுவரை 2 கட்டங்களாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன
பிரதமர் மோடி
இந்த நிலையில் 3-வது கட்டமாக ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணி நடைபெற்றது. அந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று வழங்கினார்.
புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மத்திய அரசின் கீழ் இள நிலை பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், தட்டச்சர், இளநிலை கணக்காளர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருகிறார்கள்.
தொழில் வளர்ச்சி
இதையொட்டி கோவையில் நடந்த விழாவில் மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி தலைமை தாங்கி மொத்தம் 96 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்ரா உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி திட்டங்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வந்த நமது நாட்டில் தற்போது ராணுவ தளவாடங்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சரித்திரம் படைத்து வருகிறது.
உள்கட்டமைப்பு, திறன்மேம்பாடு, இளைஞர்களை வலுப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
புகைப்படம் எடுத்தனர்
விழாவில் கோவை வருமானவரித்துறை தலைமை ஆணையர் பூபால் ரெட்டி, முதன்மை ஆணையர்கள் சந்தனா, ரங்கராஜ், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நடந்த இடத்தின் அருகே பிரதமர் மோடியிடம் இருந்து பணி ஆணைகள் பெறுவது போன்று பாதாகை அமைக்கப்பட்டு இருந்தது. பணி நியமன ஆணை பெற்றவர்கள் அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.