மத்திய அரசு பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம்
மத்திய அரசு பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம்
நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் மத்திய அரசு பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாய சங்கத்தினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நகல் எரிக்கும் போராட்டம்
நாகை அருகே பாப்பாக்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போரட்ட்டம் நடைபெற்றது.
உணவு மானியம், உர மானியம், 100 நாள் வேலை திட்ட நிதி ஆகியவற்றை சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறைத்து விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பட்ஜெட் நகலை தீயிட்டு எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையான போலீசார், நகலை எரிக்க விடாமல் தடுத்தனர்.
தள்ளுமுள்ளு
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்பை மீறியும் பட்ஜெட் நகலை விவசாயிகள் எரித்தனர்.
இதேபோல் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெரு, கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு, கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடி கடைத்தெரு, சிக்கல் கடைத்தெரு, தலைஞாயிறு கடைத்தெரு, கீழையூர், திருமருகல் பஸ் நிலையம் அருகில் உள்ளிட்ட 10 இடங்களில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை விவசாயிகள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள், கம்யூனிஸ்டு கட்சியினர் நகலை எரிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.