கல்லுக்குழியில் செந்தூரப்பூ மரக்கன்று
கல்லுக்குழியில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் அருகே தமிழகத்திலேயே முதன்முறையாக செந்தூரப்பூ மரக்கன்றை கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நட்டார். பின்னர் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமியிடம் சில மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறுகையில், எந்த இடமாக இருந்தாலும் பொதுவாக வனங்களின் பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக தான் உள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக செந்தூரப்பூ மரக்கன்று இங்கு நடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 33 சதவீதம் வனப்பரப்பு அடைய வேண்டும் என்பதே இலக்கு. ஆகவே இன்னும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட வேண்டி இருக்கிறது. விரைவில் இலக்கை அடைவோம். மாநகராட்சியில் நெருக்கடியான இடங்களில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் பணியை தொடங்கி உள்ளனர் என்றார்.இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன், கோவில் மண்டல துணை ஆணையர் செல்வராஜ், செயல்அலுவலர் சுதா மற்றும் மரம் அறக்கட்டளை தாமஸ், தண்ணீர் அமைப்பு நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.செந்தூரப்பூ மரம் வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் செந்தூரப்பூ மரம் இல்லை. இதை உணர்ந்த சத்தீஷ்கர் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பிரசன்னா முயற்சியால் விதைகள் மூலம் செந்தூரப்பூ மரக்கன்றுகள் தமிழகத்தில் வளர்க்கப்பட்டன. தமிழகத்தில் முதல்முறையாக திருச்சியில் இந்த மரக்கன்று நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.