நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு: மதுரையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டடி.எம்.சவுந்தரராஜன் முழு உருவச்சிலை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட டி.எம்.சவுந்தரராஜன் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

Update: 2023-08-16 20:28 GMT


ரசிகர்களால் டி.எம்.எஸ். என்று அழைக்கப்படும் மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

டி.எம்.சவுந்தரராஜன்

மதுரை தெற்கு கிருஷ்ணன்கோவில் பகுதியில், சவுராஷ்டிரா குடும்பத்தில் 1923-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி டி.எம்.சவுந்தரராஜன் பிறந்தார். இளம் வயதிலேயே இசை ஆர்வம் கொண்ட அவர், மேடைகளில் பாடுவதில் வல்லவர். அந்த ஆர்வமே அவருக்கு சினிமா வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

1946-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதடி' என்ற பாடல்தான் டி.எம்.எஸ். முதன்முதலாக பாடிய பின்னணி பாடல் ஆகும்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடி பல தலைமுறை கண்ட பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் பெற்றார்.

10 ஆயிரம் பாடல்கள்

தன்னுடைய 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்து பாடி இருக்கிறார்.

தமிழ் உள்பட 11 மொழி படங்களில் பாடியுள்ளார். தன் பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டி.எம்.எஸ் 91-வது வயதில் 25.5.2013 அன்று மரணம் அடைந்தார்.

முழு உருவச்சிலை

அவரது நூற்றாண்டையொட்டி, டி.எம்.எஸ். நினைவாக அவர் வாழ்ந்த சென்னை மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு அவரது பெயரை, சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டினார். அதே போல் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊரான மதுரையில் அவருக்கு முழுஉருவச்சிலை அமைத்து பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்று மதுரை முனிச்சாலையில் உள்ள மாநகராட்சி பழைய கிழக்கு மண்டல அலுவலகத்தில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலை தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி டி.எம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார். அவர் 'ரிமோட் பட்டனை' அழுத்தியதும், சிலை முன்பு இருந்த திரை விலகியது. பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த டி.எம்.சவுந்தரராஜன் உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சிலையை திறந்து வைத்ததற்காக டி.எம்.சவுந்தரராஜன் குடும்பத்தினர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது, டி.எம்.சவுந்தரராஜனின் மகன் பால்ராஜ் நன்றி தெரிவித்து பேசுகையில், "எனது தந்தையின் சிலையை திறந்து வைத்த முதல்-அமைச்சருக்கு மிக்க நன்றி. இந்த நேரத்தில் நான் எனது தந்தை பாடிய ஒரு பாடலை பாட வேண்டுமென்றால் அது, அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா... என்பது சரியாக இருக்கும்" என்று கூறினார்.

அமைச்சர்கள்

விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மூர்த்தி, ரகுபதி, சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சருக்கு கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

விழா முடிந்ததும் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார். இன்று (வியாழக்கிழமை) காலையில், ராமநாதபுரம் புறப்படும் அவர், அங்கு நடக்கும் தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்