சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில், தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. அதன் அருகே, செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை உள்ளது. நேற்று மாலையில் இந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவி செல்போன் கோபுரத்திலும் பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அலறியடித்தபடி தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து செல்போன் கோபுரத்தில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் ஜெனரேட்டர் அறை முழுமையாக எரிந்து நாசமானது. செல்போன் கோபுரத்தில் இருந்த வயர்களும் தீயில் கருகின.