தூக்குப்போட்டு செல்போன் கடை உரிமையாளர் தற்கொலை

நாகூரில் செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-05 18:45 GMT

நாகூர்:

நாகூரில் செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கடை உரிமையாளர்

நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆமீர் ஹம்சா மகன் ஹாஜா மெய்தீன் (வயது 30). இவர் நாகையில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். ஹாஜா மெய்தீனுக்கு ஆயிஷா நூர் என்ற மனைவியும், ஆஷீதீன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயிஷா நூர் அவரது தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் நேற்று காலை அவரது மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

உடனே அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாஜா மெய்தீன் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிணமாக கிடந்த ஹாஜா மெய்தீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்