ஆதார் எண்ணுடன் செல்போன், வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்
பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தின்கீழ் தொடர்ந்து நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன், வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிப்பாளையம்:
பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தின்கீழ் தொடர்ந்து நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன், வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு நிதி உதவி
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள தகுதியான விவசாயிகளுக்கு 11-வது தவணைத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்த தவணைத்தொகையை தொடர்ந்து பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை இணைத்து பதிவேற்றம் செய்வது கட்டாயம் ஆகும்.
ஆகவே, விவசாயிகள் காலதாமதம் இன்றி உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது இ-சேவை மையத்திற்கு சென்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நில ஆவணங்கள்
மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்த தகுதியான விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். நில ஆவணங்கள் தமிழ்நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களுக்கும், இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரம் நில ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே, தகுதியான விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆவணங்களை வழங்கி இணையதளத்தில் நில விவரங்களை விவசாயிகள் இணைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.