மகளிர் தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-09 16:24 GMT

மகளிர் பல்கலைக்கழகம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் கலா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் அவர் பேசும்போது பெண்களின் பெருமை, நிகழ்கால பெண்களின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக பதிவாளர் ஷீலா கலந்து கொண்டு, 'மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார். மதுரை தமிழக கோவில் கலைமரபு கடம்பவனம் இயக்குனர் சித்ரா கணபதி கலந்து கொண்டு, பெண்களின் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினார்.

விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, பேராசிரியைகள் குங்குமதேவி, முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியை ஜெயப்பிரியா வரவேற்றார். முடிவில் மீனா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

பழனியாண்டவர் மகளிர் கல்லூரி

பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி மகளிர் மன்றம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். விழாவில் பழனி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, அனைத்து துறையிலும் பெண்கள் பங்கு பெற்று மேம்பாடு அடைவது குறித்தும், புராண இதிகாச காலம் முதல் தற்காலம் வரையிலான பெண்களின் நிலை குறித்தும் எடுத்துரைத்தார். கல்லூரி பேரவை துணைத்தலைவர் வாசுகி, மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தி, தங்கம் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

பி.வி.பி. கலைக்கல்லூரி

வத்தலக்குண்டு அருகே உள்ள பி.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு பி.வி.பி. கல்லூரிகளின் தாளாளர் வெங்கடேஸ்வரி சுப்பிரமணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் உபகாரசெல்வம் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் விக்னேஷ் வரவேற்றார்.

விழாவில் பாரதமாதா பவுண்டேசன் தலைவர் ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் துறைத்தலைவர் கணேஷ் நன்றி கூறினார்.

மலைக்கிராம மக்களுக்கு உதவி

இதேபோல் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள சவரிக்காடு மலைக்கிராமத்தில் மகளிர் தினவிழா நடந்தது. இதற்கு பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு தலைமை தாங்கினார். பின்னர் அவர், மலைக்கிராமத்தில் வசிக்கிற மக்களுக்கு வேட்டி-சேலை, உணவுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்