காதலர் தின கொண்டாட்டம்: பூங்காக்களில் குவிந்த காதல் ஜோடி

காதல் தினத்தை கொண்டாட நேற்று சேலம், ஏற்காடு, ேமட்டூர் பூங்காக்களில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.

Update: 2023-02-14 22:39 GMT

காதலர் தினம்

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் அண்ணா பூங்காவில் நேற்று காலை முதலே காதல் ஜோடியினர் வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் பூங்காவில் உள்ள இருக்கையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் ஜோடியாகவும், காதல் திருமணம் செய்தவர்களும் வந்திருந்தனர்.

மேலும், ஒருவரை ஒருவர் தாங்கள் கொண்டு வந்த பரிசுகளை கொடுத்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு அண்ணா பூங்காவில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளின் நடமாட்டமாக இருந்ததை காணமுடிந்தது.

ஏமாற்றம்

இதேபோல், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நேற்று ஏராளமான காதல் ஜோடியினர் வந்தனர். ஆனால் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா விடுமுறையாகும். அதை தெரியாமல் நிறைய காதலர்கள் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பின்னர் அவர்கள் ஏற்காடு அடிவாரம் வரையில் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று மறைவான இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். மேலும் ஏற்காடு அடிவாரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதையறிந்த பெரும்பாலான ஜோடிகள் பஸ்களில் வந்தனர்.

திருப்பி அனுப்பப்பட்ட காதல் ஜோடிகளில் சிலர் காதலன் தனியாக முன்னால் மோட்டார் சைக்கிளில் செல்ல, காதலி தனியாக பஸ்களில் சென்றதையும் காணமுடிந்தது. பின்னர் அவர்கள் ஏற்காட்டில் ஒன்றாக இணைந்து சுற்றுலா தலங்களில் பொழுதை கழித்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் உள்பட சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகளை காண முடிந்தது. காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை பரிமாறிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினர்.

மேட்டூர்

மேட்டூர் அணை பூங்காவில் நேற்று காலை காதல் ஜோடிகள் வரத்து இல்லாமல் இருந்தது. பின்னர் மதியத்துக்கு மேல் காதல் ஜோடிகள் வர தொடங்கினார்கள். அவர்கள் பூங்காவில் ஒதுக்குப்புறமான இடங்களில் அமர்ந்து உரையாடினார்கள். கடந்த ஆண்டு காதலர் தினத்துக்கு வந்த காதல் ஜோடிகளை விட, இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே காதல் ஜோடிகள் வந்திருந்தனர். பின்னர் மாலையில் அவர்கள் பூங்காவில் இருந்து வெளியேறினார்கள்.

மேலும் செய்திகள்