நெல்லையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கேரள மக்கள் சார்பில் நெல்லையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது இங்குள்ளவர்கள் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் நெல்லையில் வாழும் கேரள மக்கள் சார்பில் நேற்று நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலம் வரையப்பட்டு, கேரள மன்னர் மாவேலி சக்கரவர்த்தி வருகையை நினைவு படுத்தும் வகையில், மன்னர் வேடம் அணிந்தவர் செண்டை மேளம் முழங்க விழாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவுக்கு நெல்லை மாவட்ட மலையாளி நலச்சங்க தலைவர் முகமது தலைமை தாங்கினார். செயலாளர் வின்சென்ட் அந்தோணி வரவேற்றார். முன்னாள் தலைவர் நம்பூதிரி பாடு முன்னிலை வகித்தார்.
விழாவில் காலை முதல் மாலை வரை பல்வேறு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பொருளாளர் பர்ஷத் நன்றி கூறினார்.