சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

Update: 2023-06-21 19:05 GMT

சர்வதேச யோகா தினம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் ஜெகதீசன் முன்னிலைவகித்தார்.

இதையொட்டி பள்ளி மைதானத்தில் 'யோகா 2023' என்ற ஆங்கில எழுத்து வடிவத்தில் மாணவர்கள் அமர்ந்து யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து எளிய முறையில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

யோகா பயிற்சி மேற்கொள்வதால் மன அழுத்தம் குறையும். எதிர்மறை சிந்தனைகள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் உருவாகும் என மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன், ஓவிய ஆசிரியர் சேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.

நோயாளிகளுக்கு பயிற்சி

இதேபோல் எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுஸ்பிரிவு சார்பில் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா தலைமை தாங்கினார். இதில் சித்த மருத்துவர் பூபதிராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி, தடா ஆசனம், சூரிய நமஸ்காரம், சக்கர ஆசனம், நினைவாற்றல் பயிற்சி போன்றவற்றை வழங்கினார்.

இதில் மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், மாவட்ட பூச்சியில் வல்லுனர் சேகர், சுகாதார ஆய்வாளர் ராஜகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் கொசவம்பட்டியில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இதேபோல் தபால்துறை சார்பில் ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது. இதில் தபால்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். நாமக்கல் ரெயில் நிலையத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

அரசு பள்ளிகளில்

இதேபோல் பள்ளிபாளையம் அரசு மகளிர் கிருஷ்ணவேணி மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் அறிவுத்திருக்கோவில் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த யோகா மூத்த பேராசிரியர் சீனிவாசன் யோகா முக்கியத்துவம் குறித்து பேசினார். தினமும் யோகா செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மன அமைதியும், வலிமையும் பெறும். இதனால் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி படிக்கலாம். மருத்துவ செலவு குறைக்கப்படும். இன்றைய காலகட்டம், சூழ்நிலைக்கு யோகா அனைவரும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆவராங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில், நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்