விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டுகோள்
விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகள் சிலரிடம் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் வரப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தர்மராஜன், சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்ய வேண்டும்
இந்த நிலையில் தர்மராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அவர்கள் வருகிற 22-ந் தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.