கடைமடையை எட்டிப்பார்க்காத காவிரி நீர்

மேட்டூர் அணை திறந்து 27 நாட்களாகியும் கடைமடையை காவிரி நீர் எட்டிப்பார்க்காததால் ஏரி, குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

Update: 2023-07-09 21:52 GMT

சேதுபாவாசத்திரம் :

மேட்டூர் அணை திறந்து 27 நாட்களாகியும் கடைமடையை காவிரி நீர் எட்டிப்பார்க்காததால் ஏரி, குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

மேட்டூர் அணை

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்கு மேட்டூர் அணை திறந்து 27 நாட்களாகியும் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. கடந்த ஆண்டு மேட்டூர் அணை மே 26-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன்12-ந் தேதி மேட்டூர் அணையும், கல்லணை 17-ந்் தேதியும் திறக்கப்பட்டு 27 நாட்களை கடந்த நிலையில் கடைமடை பகுதியை காவிரி நீர் எட்டிப்பார்க்கவில்லை.

5 நாட்கள் வீதம் முறைவைத்து கடைமடைக்கு தண்ணீர் வழங்கப்படும் என கூறும் அதிகாரிகள், அணை திறந்து 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளனர். கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்தால்தான் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

கடைமடை பகுதி

கல்லணையில் இருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இரு பிரிவுகளாக வந்து சேர்கிறது. ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் திறந்து விட்டால்தான் கடைமடையை தண்ணீர் எட்டிப்பார்க்கும் முறை வைக்கப்படாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் வந்தால்தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும்.

வறண்டு கிடக்கும் ஏரிகள்

இது குறித்து கடைமடை விவசாயிகள் கூறுகையில்,சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தற்பொது போதுமான அளவு மழை பெய்யாததால் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. இந்த ஆண்டாவது சம்பா சாகுபடிக்கு நாற்றுவிட ஆடிப்பட்டம் கைகூடும் என விவசாயிகள் எண்ணியிருந்த நிலையில், ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப மும்முரமாக இருந்து வருகிறோம்.

ஆனால் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வராததால் 500-க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது.

முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும்

கடைமடை பகுதியில் தற்போதுவரை போதுமான மழைபெய்யவில்லை.. ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை இன்னும் 30 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீரை திறந்து விட வேண்டும். முழுமையாக முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கைவிட்டு போன ஆடி பட்டம் நாற்றுவிடும் பணிகளும் நிறைவடைந்துவிடும். அதே சமயம் ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பிவிடும். எனவே மாவட்ட கலெக்டர் கடைமடை பகுதிக்கு கவனம் செலுத்தி 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்