காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-10-16 21:01 GMT

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

காவிரியில் வெள்ளம்

கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் காரணமாக அணைக்கு வரத்தாகும் நீர், உபரி நீராக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் மாலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீரும், நேற்று காலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. இதனால், ஈரோடு உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு காவிரி கரை பகுதிகளில் வருவாய் துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகிறார்கள்.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

இதில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரியோரம் உள்ள கோவிலில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் ஒரு சில வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது.

இதேபோல், மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான பவானி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, அங்குள்ளவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்