காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பவானியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

பவானியில் காவேரி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

Update: 2022-08-28 03:33 GMT

பவானி,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வந்தது. இதனை தொடரந்து மேட்டூர் அணையில் இருந்த உபரி நீர் அனைத்தும் 16 மதகு கண் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி உட்பட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வலியுறுத்தியும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என வெல்ல அபாய எச்சரிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி மற்றும் காவேரி வீதி ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களாக கருதப்பட்டு உள்ளது.

பகுதியில் வசிக்கும் சுமார் 450 குடும்பங்கள் அவ்வப்போது வெள்ளம் வரும் பொழுது பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பவானி கந்தன் பட்டறை பகுதியில் உள்ள 28 குடும்பம், பசுவேஸ்வரர் வீதியில் உள்ள 20 குடும்பம், தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்