ஆபத்தை ஏற்படுத்தும்திறந்தவெளி கிணறுகள்- குவாரி குழிகளை சுற்றி தடுப்புவேலி அமைக்க வேண்டும்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்

ஆபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளி கிணறுகள்- குவாரி குழிகளை சுற்றி தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளாா்

Update: 2023-08-12 23:48 GMT

ஈரோடு மாவட்டத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் குவாரி குழிகளை சுற்றி தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணறுகள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், அதுதொடர்பாக ஆய்வு செய்து விரிவான தகவல் பெற்று, பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளையும் திறம்பட பாதுகாப்பது அவசியம். இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கை

இதேபோல் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவற்றை கண்டறிந்து விபத்துகளை தடுக்கும் வகையில் உடனடியாக மூட வேண்டும். மேலும் கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு வாலிபர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் குவாரி குழிகளை சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில் கட்டுமான குழிகள் மற்றும் அகழிகளை எளிதில் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் வலுவான தடுப்புகளை அமைத்திட வேண்டும். அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்