இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக பிடிபட்ட 5 இலங்கை மீனவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசில் ஒப்படைப்பு

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக பிடிபட்ட 5 இலங்கை மீனவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

Update: 2022-10-16 18:45 GMT

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் கடலோர பாதுகாப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய எல்லைக்குள் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ரோந்து கப்பல்களில் சென்று ரோந்து பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கடலோர காவல்படையை சேர்ந்த 'ஷவுர்யா' ரோந்து கப்பலில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது.

5 மீனவர்கள் கைது

உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அதில் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த மார்க்ஸ் ஜூட், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகிய 5 பேரும் இருந்தனர். அந்த படகில் 270 கிலோ மீன்களும் இருந்தன.

தொடர்ந்து கடலோர காவல்படையினர் இலங்கை மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். அங்கு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், இன்ஸ்பெக்டர் சைரஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை தருவைகுளத்துக்கு படகுடன் அழைத்து சென்றனர். அப்போது படகு தரை தட்டியதால் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. மதியத்துக்கு பிறகு போலீஸ் நிலையத்துக்கு வந்த இலங்கை மீனவர்களிடம் கியூ பிரிவு போலீசார் உள்பட பல்வேறு உளவுப்பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர்.

காற்று காரணமாக..

அப்போது, கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், சீதோஷ்ண நிலை காரணமாக வழி தவறி இந்திய எல்லைக்குள் படகு வந்து விட்டதாக பிடிபட்ட மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதன்பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்களை ராமநாதபுரம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர்கள் இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்