தூத்துக்குடியில் பிடிபட்ட இங்கிலாந்து கடத்தல்காரருக்கு ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகல்

தூத்துக்குடியில் பிடிபட்ட இங்கிலாந்து கடத்தல்காரருக்கு ஆங்கிலத்தில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

Update: 2022-10-11 18:45 GMT

தூத்துக்குடியில் பிடிபட்ட இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் ஜோனதன் தோர்னுக்கு ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகல் நேற்று கோர்ட்டில் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து கடத்தல்காரர்

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்று உள்ளார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு கியூ பிரிவு போலீஸ் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜோனதன் தோர்னுக்கு ஜாமீன் கிடைத்தாலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் தொடர்ந்து ஜெயிலில் உள்ளார்.

ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை

இந்த நிலையில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா கடந்த 3-ந் தேதி தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட் குபேரசுந்தர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜரான ஜோனதன் தோர்னிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் தமிழில் இருந்ததால், தனக்கு ஆங்கிலத்தில் நகல் வேண்டும் என்று ஜோனதன் தோர்ன் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகலை கியூ பிரிவு போலீசார் தயார் செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கியூ பிரிவு போலீசார் ஆங்கிலத்தில் தயார் செய்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதன் நகல் அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்