ரூ.1.29 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடியே 29 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
தள்ளுபடி விற்பனை
நாமக்கல் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் நேற்று காந்தி பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கதர் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நடப்பாண்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், கம்பளி ரகங்களுக்கு 20 சதவீத சிறப்பு தள்ளுபடியும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு உள்ளது.
எளிய கடன் வசதி
அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வகையான சோப்பு ரகங்கள், தேன், தோல் பொருட்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் கைகழுவும் திரவம் உள்ளிட்ட பல்வகையான பொருட்கள் கதரங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை, எளிய நூற்போர்கள் மற்றும் நெய்வோர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காந்தி சிலைக்கு மாலை
இதனை தொடர்ந்து, நகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், காதி விற்பனை நிலைய மேலாளர் தாரா சவுத்திரி மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.