குமரியில் முந்திரி சீசன் தொடங்கியது

குமரி மாவட்டத்தில் முந்திரி சீசன் தொடங்கியது. இதையடுத்து குலசேகரம் சந்தையில் முந்திரி கொட்டைகள் கிேலா ரூ.105 வரை விற்பனையாகிறது.

Update: 2023-04-25 21:17 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் முந்திரி சீசன் தொடங்கியது. இதையடுத்து குலசேகரம் சந்தையில் முந்திரி கொட்டைகள் கிேலா ரூ.105 வரை விற்பனையாகிறது.

முந்திரி மரங்கள்

குமரி மாவட்டத்தில் கொல்லாம் மரங்கள், கொல்லாவு மரங்கள் என மக்களால் கூறப்படும் முந்திரி மரங்கள் முன்காலத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு என அனைத்து தாலுகா பகுதிகளிலும் நிரம்பிக் காணப்பட்டன. குறிப்பாக நாகர்கோவில் மாநகரைச் உள்ளடங்கிய அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் ஆசாரிபள்ளம், பார்வதிபுரம் உள்ளிட்ட இடங்களில் முந்திரி மரங்கள் நிறைய காணப்பட்டன.

இதேபோன்று மாவட்டத்தில் பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளிலும் முந்திரி மரங்கள் ஏராளம் காணப்பட்டன. இந்தநிலையில் மாவட்டத்தில் மக்களின் குடியேற்றப்பகுதிகள் பெருகி விட்டதால் முந்திரி மரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் மட்டுமே முந்திரி மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பேச்சிப்பாறை மலைப்பகுதிகளில் பழங்குடி குடியிருப்புப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் முந்திரி மரங்கள் காணப்படுகின்றன.

சுவை மிகுந்த தின்பண்டம்

முந்திரிப்பழங்களுடன் இருக்கும் முந்திரிக் கொட்டைகளின் உள்ளே இருக்கும் பருப்பு சர்வதேச அளவில் சுவை மிகு தின்பண்டமாகவும், உணவுப் பதார்த்தங்களில் சுவையூட்டியாகவும் உள்ளது. இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் மானாவாரி பயிரான முந்திரி மரங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.

முந்திரி மரங்களில் பிப்ரவரி மாதம் முதல் பூக்கள் பூக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை முந்திரிப் பழங்கள் மற்றும் முந்திரி கொட்டைகளின் சீசன் காலம் ஆகும்.

மாவட்டத்தில் முந்திரி மரங்களில் சீசன் காலத்தில் முந்திரித் தோட்ட விவசாயிகள் அல்லது குத்தகைத்தாரர்கள் முந்திரிப் பழங்களை பறித்து அவற்றின் கொட்டைகளை சேகரித்து விற்பனை செய்கின்றனர். மரங்களில் பழுத்துக் கிடக்கும் முந்திரிப் பழங்களை பறித்து உண்டு விட்டு அதன் கொட்டைகளை மரங்களில் மூடுகளில் போட்டு விட்டு செல்லும் பழக்கமும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. முந்திரிப் பழங்களை தென்னை ஈர்க்கிலில் கோர்த்து சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் பழக்கம் முன்காலங்களில் மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

முந்திரி தொழிற்சாலைகள்

குமரி மாவட்டத்தில் திருவட்டார், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகா பகுதிகளில் முந்திரி கொட்டைகளை உடைத்து முந்திரி பருப்பு எடுக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்குத் தேவையான முந்திரி கொட்டைகள் 90 சதவீதம் வரை ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து தான் இறங்குமதி செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் தற்போது முந்திரிக் கொட்டைகளின் சீசன் தொடங்கியது. இதையடுத்து பேச்சிப்பாறை பழங்குடி பகுதிகள் உள்பட முந்திரி மரங்கள் உள்ள இடங்களில் இருந்து முந்திரிக் கொட்டைகள் சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் இருந்து பழங்குடி மக்கள் அதிக அளவில் குலசேகரம் சந்தைக்கு முந்திரிக் கொட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

ரூ.105-க்கு விற்பனை

உலர்ந்த முந்திரிக் கொட்டைகள் ரூ.90 முதல் ரூ.105 வரை தற்போது கொள்முதல் செய்யப்படுகின்றன.

இது குறித்து மோதிரமலை பகுதியைச் சேர்ந்த ரெகுகாணி கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில் முந்திரிக் கொட்டைகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம். பழங்குடி பகுதிகளிலும் ரப்பர் மரங்கள் அதிக அளவில் நடப்பட்டு வருவதால் முந்திரி மரங்கள் குறைந்து விட்டன. அதே வேளையில் புதிய நவீன ஒட்டு ரக முந்திரி மரக்கன்றுகளை கலப்புப் பயிராக பிற பயிர்களுக்கு இடையே நடவு செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு முந்திரி சீசன் நன்றாக உள்ளது. அதே வேளையில் குரங்குகளின் அட்டகாசத்தால் முந்திரிக் கொட்டைகள் நாசமாகும் நிலையும் உள்ளது. மேலும் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முந்திரிக் கொட்டைகளின் இயல்பான பளபளப்பு மறைந்து கருப்பாக மாறு விடுகின்றன. இதனால் எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலையும் உள்ளது. எனினும் தற்போது சராசரியாக கிலோவிற்கு ரூ.90 முதல் 105 வரை விற்பனையாகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்