நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுகிறது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-28 19:08 GMT

குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் தங்களது பகுதி சார்ந்த கருத்துகளை தெரிவித்தனர். அப்போது காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுகிறது. வரும் காலங்களில் பணம் வசூல் நடைபெறாமல் தடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் விற்பனை செய்யும் தானியங்களுக்கு பணம் கணக்கில் செலுத்த 4 அல்லது 5 நாட்கள் ஆகின்றன. இதை ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து வாய்க்கால், பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை நல்ல முறையில் தூர்வாரி அதன் கரைகளில் விவசாயிகள் பயன்படுத்தும் அளவிற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மருதையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து இருபுறமும் கரைகளை போட வேண்டும். மேலும் ஆற்றின் உள்ளே உள்ள வேலிக்கருவைகளை அகற்ற வேண்டும். மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாகாமல் மருதையாற்றை தூர்வார வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்திய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும், அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் செயல்படுத்தப்பட்ட கதவணை திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றார்.

நிவாரணம் கிடைக்க நடவடிக்கை வேண்டும்

இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த விவசாயி தமிழ்ஒளி பேசுகையில், இரும்புலிக்குறிச்சி கிராம பகுதியில் வியாபாரிகள் முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததனால் அவர்கள் நஷ்டமடைந்துள்ளனர். எனவே தோட்டக்கலை துறையினர் மாவட்ட கலெக்டர் மூலம் ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் விவசாயிகள் இடுபொருள் எடுத்து வரும் சாலையை அளவிட்டு மேம்பாடு செய்ய வேண்டும். சாலையின் இடுகாட்டில் இருந்து அரசுக்கு சொந்தமான பொதுவழி பாதையை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் மண்டல மண்ணிருக்கும் திட்டத்தில் அரசு இதழில் இடம்பெற்ற ஏரிகளில் விவசாயிகள் விரும்பும் ஏரியில் இலவச வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். பொதுப்பணி துறையின் ஏரிகளில் மழை காலத்திற்கு முன்னர் குடி மராமத்து பணிகள் செய்ய வேண்டும். அனைத்து வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். கூட்டுறவு துறையில் அனைத்து பயிர்களுக்கும் காலக்கெடு ஒரு வருடமாக நீட்டித்து தர வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் கட்டப்படுகின்ற தடுப்பணைகளில் 100 மீட்டர் தண்ணீர் வரத்து மற்றும் போக்கிடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் கரைகள் அமைக்க வேண்டும். கரைகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி...

விவசாய சங்க பிரதிநிதி செங்கமுத்து பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏரி, வாரி ஆகியவற்றில் வேலை வழங்கும்போது ஏரி மற்றும் வாரி அளந்து அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கு அவர்களது நிலத்திற்கு செல்வதற்கும், ஏழை மக்களுக்கு மாடு, ஆடுகள் வளர்ப்பதற்கும் இடம் முழுமையாக கிடைக்கும். ஒவ்வொரு ஏரியும் 4 அல்லது 5 முறை சுமார் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை நடைபெற்று உள்ளது. வேலை நடைபெற்றதை பற்றி கூட கேட்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கு ஒரு பாதை கிடைத்ததாலும் நிம்மதியாக சென்று வருவார்கள். நில அளவீடு செய்கின்ற நில அளவையர் விவசாயிகள், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சீனியர் டி பதிவேடு வைத்து அதில் பதிந்து அதன்படி அளவீடு செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்