வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்வக்கீல்களுக்கு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா அறிவுறுத்தல்
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரித்து, இழப்பீடு வழங்குவதற்காக கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் வரவேற்றார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா கலந்து கொண்டு, சிறப்பு நீதிமன்றங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் 47 போலீஸ் நிலையங்கள், 7 மகளிர் காவல் நிலையம் உள்பட மொத்தம் 58 போலீஸ் நிலையங்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் 47 நீதிமன்றங்களும் உள்ளன. தற்போது புதிதாக 2 சிறப்பு நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.
14 லட்சம் வழக்குகள்
இந்தியாவில் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்களை சேர்த்து மொத்தம் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 71 லட்சம் வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சம் வழக்குகளை முடித்து வைத்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. இது நீதிபதிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.
நீதிமன்றங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. கடலூர் மாவட்டத்தில் விபத்து வழக்குகளை விரைந்து முடிக்க 2 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை செயல்படுவதற்காக 4 நீதிமன்றங்களில் இருந்து முதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு 544 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. அதுபோல் 2-வது சிறப்பு நீதிமன்றத்திற்கு 440 வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வக்கீல்கள் எந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எந்த வழக்குகளுக்கு இரண்டாவது இடம் கொடுக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
தெளிவு வேண்டும்
மேலும் வக்கீல்கள் அனைவரும், பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். காமராஜர் 4-ம் வகுப்பு படித்து விட்டு எந்த இடத்தில் அணை கட்டலாம், எந்த இடத்தில் தண்ணீர் இருந்தால் விவசாயத்திற்கு கொண்டு போக முடியும் என தெளிவாக அறிந்திருந்தார். அவரிடம் தெளிவு இருந்ததால், உயர்ந்த இடத்தில் இருந்தார். அதுபோல் வக்கீல்கள் அனைவரும் தெளிவோடு இருக்க வேண்டும். கடலூரில் கமர்ஷியல் கோர்ட்டு விரைவில் திறக்கப்படும். மேலும் நீதிமன்றங்களுக்கும் வழக்காடிகளுக்கும் நண்பனாக இருந்து நீதி உடனுக்குடன் கிடைக்க வக்கீல்கன் முன்வர வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 3 முதல் 4 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. ஆனால் சென்னை ஐகோர்ட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் எந்தவொரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதில்லை. அதனால் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆஷா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி, சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பார் அசோசியேஷன் சங்க தலைவர் துரை.பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ராமநாதன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நீதிபதி பிரபாகர் நன்றி கூறினார்.