இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

Update: 2022-07-07 01:44 GMT

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை.

இவ்வளவு பெரிய தொகை அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத்தான் இருக்கும், அதாவது. மக்கள் வரிப்பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெறும் மோதலினால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, அ.திமு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே, என் மனுவை பரிசீலித்து அ.தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்