பிளாஸ்டிக் பைகளில் பால் விற்க தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பிளாஸ்டிக் பைகளில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பதற்கு தடை கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த பிளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை அற்றவையாக உள்ளன.
இந்த பிளாஸ்டிக் பைகளை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் தூக்கி எறிவதால் மாசு ஏற்படுகிறது. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
தடை விதிக்க வேண்டும்
இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேவேளையில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் இடமாகவும் தமிழகம் உள்ளது.
சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பதிலளிக்க நோட்டீஸ்
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய மற்றும் மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர்கள், ஆவின் நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.