சொந்த வீ்ட்டில் 550 பவுன் நகையை திருடி கொடுத்த வழக்கு: தொழில் அதிபர், காதலியை காவலில் எடுத்து விசாரணை

சொந்த வீட்டில் 550 பவுன் நகை திருடிய வழக்கில் நகையை மீட்பதற்காக தொழில் அதிபர் மற்றும் அவரது காதலியை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-08-17 23:12 GMT

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). தொழில் அதிபரான இவர், பூந்தமல்லியில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். சொந்தமாக பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

இவர், சொந்த வீட்டிலேயே தனது தாய், மனைவி மற்றும் தம்பி மனைவியின் நகைகள் என சுமார் 550 பவுன் நகையை திருடி, தனது கள்ளக்காதலியான வேளச்சேரியை சேர்ந்த சுவாதி (22) என்பவருக்கு பரிசாக கொடுத்தார். மேலும் ரூ.30 லட்சம் மற்றும் கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாதி மற்றும் சேகர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் காவல்

ஆனால் தன்னிடம் எந்த நகைகளையும் சேகர் கொடுக்கவில்லை என சுவாதி மறுத்து வருகிறார். சேகர் கொடுத்த நகைகள் அதிகம் என்பதால் அவற்றை மீட்க இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கேட்டு பூந்தமல்லி கோர்ட்டில் போலீசார் மனு அளித்தனர்.

அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி சுவாதியிடம் 5 நாட்களும், சேகரிடம் 3 நாட்களும் விசாரிக்க அனுமதி அளித்தார்.

ரகசிய இடத்தில் விசாரணை

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் சேகர் மற்றும் சுவாதியிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உண்மையாகவே சுவாதியிடம் இவ்வளவு நகை மற்றும் பணத்தை சேகர் கொடுத்தாரா?. சேகரிடம் இருந்து சுவாதி எவ்வளவு நகை, பணத்தை பறித்தார்?. அவற்றை எங்கு வைத்து உள்ளார்? என்ற கோணத்தில் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

சுவாதியிடம் பெண் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரை தங்க வைத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணைக்கு பிறகே சேகரிடம் சுவாதி பறித்த நகை, பணத்தை எங்கு வைத்து உள்ளார்? சேகர் மட்டுமின்றி வேறு யாரிடமாவது இதுபோல் அவர் மோசடி செய்து உள்ளாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்