பேரையூரில் அனுமதியின்றி செங்கல்சூளைகள் செயல்படுவதாக வழக்கு - கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தவு
பேரையூரில் அனுமதியின்றி செங்கல்சூளைகள் செயல்படுவதாக ,கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை மாவட்டம் பேரையூர் டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நண்பர்களுடன் இணைந்து `இயற்கை மீட்புக்குழு நண்பர்கள்' என்ற குழுவின் மூலம் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் அனுமதியின்றி செயல்படுகின்றன. விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து செங்கல் சூளை நடத்துகின்றனர். இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியும், வனவிலங்குகளும் இந்த செங்கல் சூளைகளால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இப்பகுதி தாசில்தார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்ததில், 92 இடங்களில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்படுவதாக அதிகாரிகள் அடையாளம் கண்டு உள்ளனர். எனவே இந்த செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுத்து, இயற்கை மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் பி.எம்.விஷ்ணுவர்த்தனன் ஆஜராகி, செங்கல்சூளைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் விலங்குகள், காடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
விசாரணை முடிவில், இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.