பழனி திருஆவினன்குடி கோவிலில் தர்ணா; இந்து அமைப்பினர் மீது வழக்கு
பழனி திருஆவினன்குடி கோவிலில் தர்ணாவில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில் உபகோவிலான அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன்குடி கோவிலில் நேற்று முன்தினம் இந்து அமைப்பினர் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பங்குனி உத்திர திருவிழா தொடங்கவுள்ள நிலையில் கோவிலில் தூய்மைப்பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக செய்தனர். இந்தநிலையில் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பை சேர்ந்த 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.