மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் முதலைகளை இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-10 07:46 GMT

சென்னை,

மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசுத் துறைகள் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னை சிந்தாதரிபேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ.விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், "56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்படவுள்ளது. எனவே முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குஜராத்தில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிவதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டனர்.

முதலைகள் இடமாற்றம் செய்ய சட்டப்படி முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபுணர்களும் அந்த மையத்தில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்