பத்திரப்பதிவுக்கு ரூ.1.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பத்திரப்பதிவுக்கு ரூ.1.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2023-10-06 18:57 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆரூர்பட்டி பழக்காரனூரை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 55). இவர், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளார். அந்த மனுவில், ஓமலூர் அருகே ஆரூர்பட்டியில் 2.85 எக்டர் பூர்வீக நிலத்தின் ஒரு பகுதியை என்னுடைய மகன் கலைவாணன் (32) பெயரில் தாரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்திரப்பதிவு செய்தேன். பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அல்லா பகஷ் ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டார். நான் புரோக்கர் சபரிநாதன் மூலம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தேன். அதன்பிறகு நிலத்தை பத்திரப்பதிவு செய்தார். ஆனால் மீதி பணத்தை தந்தால்தான் அசல் பத்திரத்தை தருவேன் என்று கூறுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சார் பதிவாளர் அல்லா பகஷ், புரோக்கர் சபரிநாதன் ஆகியோர் மீது நேற்று முன்தினம் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிக்கிய சார் பதிவாளர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்