தாய், மகன் மீது வழக்கு
பண மோசடி செய்த தாய், மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 58). இவர் கீழ்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். தெற்கு தெருவை சேர்ந்த பாஸ்கரன் (50), அவரது தாயார் நாகலட்சுமி (72) ஆகிய இருவரும் சேர்ந்து பாரதிதாசனிடம் டெலிபோன் ரோட்டில் எங்களுக்கு சொந்தமான வீடு உள்ளது என கூறியுள்ளனர். இவரும் அந்த வீட்டை 3 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு பேசி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் பாரதிதாசன் வேறு வீடு வாங்குவதற்காக ஒத்தி பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் நீங்கள் இருக்கும் வீட்டை நீங்களே கிரையமாக வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டின் கிரயமாக ரூ.21 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு முன் பணமாக ரூ.10 லட்சம் அவர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
பணத்தை கொடுத்த பாரதிதாசன் வீட்டின் பத்திரத்தை அவர்கள் இருவரிடம் கேட்டபோது பத்திரத்திற்கான ஜெராக்ஸ் ஒன்றை வழங்கியுள்ளனர். அதனை வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஈ.சி. எடுத்து பார்த்த போது அந்த வீடு மற்றொருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பின்னர் பாரதிதாசன் பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் இருவரும் பணத்தை திரும்ப தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பாரதிதாசன் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதி முத்து இசக்கி உத்தரவின் பேரில் பாஸ்கரன், நாகலட்சுமி ஆகியோர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.