சேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி-கணவன், மனைவி மீது வழக்கு

சேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த புகாரில் கணவன்-மனைவி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-08 21:37 GMT

அரசு வேலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரங்கனூர் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 62). இவர், விவசாயம் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

ஆத்தூரை சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி சாந்தலட்சுமி ஆகியோர் தும்பலில் உள்ள தங்களது நிலத்திற்கு செல்லும்போது, விவசாயி மாதையனுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, சசிகுமார் தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், ஏற்கனவே 40 பேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், எனவே, உங்களது மகள்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 சார்பதிவாளர் பணி ஆணை ஒரு வாரத்தில் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு 2 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.

ரூ.16 லட்சம் மோசடி

அதை உண்மை என்று நம்பிய மாதையன், தனது 2 மகள்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என்று நினைத்தார். பின்னர் அவர் ஒருவருக்கு ரூ.8 லட்சம் பேரம் பேசி 2 பேருக்கு ரூ.16 லட்சத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் அருகே வைத்து சசிகுமாரிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சசிகுமார், மாதையனின் மகள்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து மாதையன் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மாதையன் புகார் செய்தார். அதன்பேரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சசிகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சாந்தலட்சுமி ஆகியோர் மீது நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்