போலீஸ்காரர் உள்பட 7 பேர் மீது வழக்கு
இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸ்காரர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி செக்காபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 47). இவர், ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவர் மீதான புகாரை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் துரைப்பாண்டியை புவனேஸ்வரி, அவரது தாய் பாண்டியம்மாள், உறவினர்கள் சங்கர், ராஜபிரபு ஆகியோர் செருப்பால் அடித்தும், கம்புகளால் தாக்கியும் காயப்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் துரைப்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதேபோல் தனது தாய் பாண்டியம்மாளை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக நிலக்கோட்டை போலீசில் புவனேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் துரைப்பாண்டி, அவரது உறவினர்கள் சுப்பையா, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.