ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது வழக்கு

சாலை போட்டதுபோல் போலி பில் தயாரித்து ரூ.8½ லட்சம் மோசடி செய்ததாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-10-17 18:45 GMT


சாலை போட்டதுபோல் போலி பில் தயாரித்து ரூ.8½ லட்சம் மோசடி செய்ததாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரூ.8½ லட்சம் மோசடி

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவியாக இருப்பவர் விமலா (வயது 51). இந்த நிலையில் சிக்கதாசம்பாளையம் சேரன் நகர் 2-வது பாலத்தில் இருந்து மகாலட்சுமி அவென்யூவரை சாலையை மேம்படுத்த ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்துக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த சாலை அமைக்க நிர்வாக அனுமதியும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊராட்சி தலைவி விமலா, துணைத்தலைவர் வினோத்குமார் (40), காரமடை உதவி செயற்பொறியாளர் ராஜபாரதி (45), கோவை துணை கோட்ட உதவி எக்ஸ்கியூட்டிவ் செயற்பொறியாளர் ரமேஷ் (56), காண்டிராக்டர் பழனிசாமி (40) ஆகியோருடன் சேர்ந்து சாலை அமைக்கப்பட்டதுபோல போல் பில் தயாரித்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

ஊராட்சி தலைவி மீது வழக்கு

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் சாலை பணி செய்து முடித்ததுபோல் ஊராட்சி நிர்வாகம் ஆவணங்களை தயாரித்து அதில் ஊராட்சி தலைவி, துணைத்தலைவர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் காண்டிராக்டருடன் சேர்ந்து சாலை அமைத்தது போல் புகைப்படம் எடுத்து, போலி பில் தயாரித்து ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவி விமலா, துணைத்தலைவர் வினோத்குமார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடியை தொடர்ந்து ஊராட்சி தலைவருக்கான காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்