இருதரப்பினர் தகராறு; 5 பேர் மீது வழக்கு
திருக்குறுங்குடி அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள மேலமாவடியை சேர்ந்தவர் திரவியராஜ் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவரது அக்காள் கவிதாவின் கணவர் கணேசன் (39).
இந்த நிலையில் திரவியராஜின் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கணேசன் வரக்கூடாது என்று திரவியராஜ் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன், திரவியராஜிடம் சென்று தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது திரவியராஜின் செல்போன் உடைந்தது. அக்கம், பக்கத்தினர் சமரசம் செய்ததால் இருவரும் கலைந்து சென்றனர்.
சம்பவத்தன்று திரவியராஜ், கணேசன் வீட்டிற்கு சென்று உடைந்த செல்போன் குறித்து கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் திரவியராஜ் கணேசனின் வீட்டு கதவை கம்பால் தாக்கி உடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் கணேசனின் தம்பிகள் அருள்குமார், ராஜ்குமார், உறவினர் ஜெகன், ஆகியோர் சேர்ந்து திரவியராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திரவியராஜ் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த திரவியராஜ், அருள்குமார், ராஜ்குமார், ஜெகன், கணேசன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.