போக்குவரத்து விதிமீறிய 435 பேர் மீது வழக்கு
கோத்தகிரியில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிமீறிய 435 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ.4¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிமீறிய 435 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ.4¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாகன தணிக்கை
கோடை விழாவையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம், குன்னூர் சாலைகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 4 பேர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், பகல் நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் என 345 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அபராதம் விதிப்பு
அவர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ரோந்து பணி சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களில் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 89 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போலீசாரின் வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 434 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் போலீசார் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். வாகனத்தை இயக்கும் போது போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என விளக்கி கூறி சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.