நிலத்தை பெற்று மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு
நிலத்தை பெற்று மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தனது மகள் திருமணத்திற்காகவும், குடும்ப செலவினத்திற்காகவும் மண்மங்கலத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் ரூ.33 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக குணசேகரன் தனது நிலத்தை முன்பதிவு செய்து சசிகுமாருக்கு கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த நிலத்தை சசிகுமார் போலி ஆவணங்கள் மூலம் மண்மங்கலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு விற்று விட்டார். அதன் பிறகு அந்த நிலத்தை பெரியசாமி ஏ.வி.எஸ். காலனியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு விற்று விட்டாா். இதுகுறித்து குணசேகரன் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நிலத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சசிகுமார், பெரியசாமி, பாலமுருகன் ஆகிய 3 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.