பள்ளி, கல்லூரி அருகே பீடி, சிகரெட் விற்ற 12 பேர் மீது வழக்கு
குடியாத்தம், பரதராமி, கே.வி.குப்பத்தில் பள்ளி, கல்லூரி அருகே பீடி, சிகரெட் விற்ற 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் சோதனை
வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி அருகே பீடி, சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் காட்பாடிரோடு காந்திநகர், அம்மணாங்குப்பம் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பீடி, சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் குடியாத்தம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் அக்ராவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடைகளில் இருந்து பீடி, சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 பேர் மீது வழக்கு
இதேபோல் பரதராமி போலீசார் பரதராமி, கல்லப்பாடி, ராமாலை உள்ளிட்ட கிராமங்களில் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தி, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேப்பங்கநேரி, பசுமாத்தூர், மேல்மாயில், வடுகந்தாங்கல், நாகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 4 பேருக்கு அபராதம் விதித்து, அவர்களிடம் இருந்து ரூ.2,300 மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.