ஆதார் அட்டையில் கணவர் பெயரை மாற்றி நில மோசடி-பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
அரூர்:
ஆதார் அட்டையில் கணவர் பெயரை மாற்றி நில மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் மீது அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோசடி
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவராஜ். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 65). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 2 ஏக்கர் 57 சென்ட் நிலம் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்தவர் குடியரசு (58). இவருடைய மனைவி ராஜம்மாள் (56). கேசவராஜின் மனைவி ராஜம்மாளுக்கு சொந்தமான நிலம் இருப்பதை அறிந்த குடியரசுவின் மனைவி ராஜம்மாள், ஒரே பெயர் இருப்பதை பயன்படுத்தி அந்த நிலத்தை தனது பெயரில் மாற்ற திட்டமிட்டார்.
இதற்காக தனது ஆதார் அட்டையில் கணவரின் பெயரை கேசவராஜ் என்று மாற்றியுள்ளார். பின்னர் அந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி கேசவராஜின் மனைவி ராஜம்மாளுக்கு சொந்தமான நிலத்தை கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் பதிவு செய்து உள்ளார். இந்த மோசடி குறித்து அறிந்த கேசவராஜ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
3 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக கேசவராஜின் மனைவி ராஜம்மாள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட ராஜம்மாள் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய கணவர் குடியரசு, மணிமேகலை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையில் கணவரின் பெயரை மாற்றி, தனது பெயர் கொண்ட மற்றொரு பெண்ணிற்கு சொந்தமான நிலத்தை பத்திரபதிவு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.