வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு

வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரிய வழக்கை அதிகாரிகள் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-12-29 20:08 GMT

கரூர் மாவட்டம் ராஜேந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட காவிரிப்படுகையில் அமைந்துள்ள வீடுகளை விட்டு வெளியேறும்படி வனத்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜெயச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ராஜேந்திரம் கிராம பகுதியில் வீடுகள் இல்லாதவர்களுக்கு காவிரிப்படுகையில் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு சிறிய அளவிலான வீடுகளை மனுதாரர்கள் கட்டியுள்ளனர். இந்த வீடுகளுக்கு மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளன. அங்கிருந்து வெளியேறுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் எந்த விதமான சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் வீடுகளைவிட்டு வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏற்புடையதல்ல. வனத்துறை நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர்கள் வீடுகளுக்கு ஏற்கனவே மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக வனத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மனுதாரர்களின் விளக்கத்தை பரிசீலித்து கரூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்