மாரண்டஅள்ளியில் சிப்ஸ் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்-தொழிலாளி மீது வழக்கு
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி இ.பி. காலனியை சேர்ந்தவர் சென்னகுமார் (வயது 40). இவர் அந்த பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் தொழிலாளி திருமால் (45). இவர்கள் 2 பேருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னகுமார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த திருமால், சென்னகுமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும் அவரை சமாதானப்படுத்த முயன்ற மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர் முனிராஜ் ஆகியோரிடமும் திருமால் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னகுமார் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் திருமால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.