போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு எக்ஸ்ரே பிரிவில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் சேரும்போது நெப்போலியன் கொடுத்த அவரது சான்றிதழ்களை சரி பார்க்க மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அந்த சான்றிதழை சரிபார்த்தபோது அது போலி சான்றிதழ் என்று தெரிந்தது. இது குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.