ராமேசுவரம் கடைக்காரரிடம் ரூ.71 ஆயிரம் மோசடி

ரூ.20 லட்சம் கடன் வழங்குவதாக கூறி ராமேசுவரம் மளிகை கடைக்காரரிடம் ரூ.71 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-10-07 18:30 GMT


ரூ.20 லட்சம் கடன் வழங்குவதாக கூறி ராமேசுவரம் மளிகை கடைக்காரரிடம் ரூ.71 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறுஞ்செய்தி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்குபகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முனியசாமி (வயது44). இவர் கடந்த 11 வருடங்களாக ராமேசுவரத்தில் உள்ள மார்கெட்டில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த 2020-ம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் பெயரில் வீடு கட்டுவதற்கு லோன் வழங்குவதாக ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை பார்த்த முனியசாமி தனக்கும் வீடுகட்ட கடன் தேவைப்படுவதால் சரியான நேரத்தில் வந்த தகவலாக நினைத்து அந்த எண்ணில் தொடர்பு கொண்டார். இந்தியில் பேசிய நபர் தான் அந்த நிறுவனத்தின் உதவி மேலாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

அவரிடம் முனியசாமி தனக்கு வீடு கட்ட ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். முனியசாமியின் விவரங்களை கேட்ட இந்தி பேசிய நபர் கடன் பெறவேண்டும் என்றால் ஆதார் மற்றும் பான் கார்டுகளை வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து அவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

அனுமதி சான்றிதழ்

அதனை பெற்றுக்கொண்ட மர்ம நபர் ரூ.20 லட்சம் கடன் அனுமதி சான்றிதழ் நகலை முனியசாமியின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த முனியசாமி தனக்கு உடனடியாக ரூ.20 லட்சம் கடன் அனுமதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்ந்து இருந்த போது மர்ம நபர் நடைமுறை கட்டணம், வரி, இன்சூரன்சு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளார்.

அதனை செலுத்தினால்தான் கடன் தொகையை வங்கியில் செலுத்த முடியும் என்றும் உடனடியாக செலுத்துமாறும் கூறி காலக்கெடு விதித்துள்ளார். இதனை தொடர்ந்து ரூ.20 லட்சம் கிடைக்கிறதே என்ற ஆவலில் அவர்கள் வழங்கிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் மொத்தம் ரூ.71 ஆயிரம் செலுத்தி உள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் கடன் தொகையை வழங்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து முனியசாமி கேட்டபோது, தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி பணம் அனுப்புமாறு கூறி நெருக்கடி கொடுத்துள்ளனர்.

வழக்குப்பதிவு

இதனால் சந்தேகமடைந்த முனியசாமி இதுகுறித்து விசாரித்தபோது போலியானவர்கள் என்பது தெரிந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முனியசாமி சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்