கோனாபட்டில் நுங்கு வண்டி பந்தயம்
திருமயம் அருகே கோனாபட்டில் நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 60 சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர்.
பனை மரத்தின் பயன்பாடு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில், பனை மரத்தின் பயன்பாடுகள் குறித்து சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினோத பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன் அடிப்படையில் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக நோட்டீசுகள் அடித்து திருமயம் முழுவதும் ஒட்டி சிறுவர்-சிறுமிகளை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
நுங்கு வண்டி பந்தயம்
இதனை அறிந்த சிறுவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 60 சிறுவர்-சிறுமிகள் கோனாபட்டு அழகு பெருமாள் கோவில் ஊரணி கரையில் நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் இரண்டு பிரிவாக பந்தயம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே வீட்டில் தயாரித்த நுங்கு வண்டிகளுடன் சிறுவர்கள் பந்தயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு எல்லைக்கோட்டை நோக்கி ஓடி மீண்டும் திரும்பி வந்தனர். இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு தங்கம்-வெள்ளி நாணயங்கள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. திருமயம் அருகே நடைபெற்ற இந்த வினோத பந்தயத்தை காண அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.