கார்கள் மோதல்; 2 வயது குழந்தையுடன் தந்தை பலி
துறையூர் அருகே கார்கள் மோதி கொண்டதில் 2 வயது குழந்தையுடன் தந்தை பலியானார். மற்றொரு விபத்தில் மூதாட்டி இறந்தார்.
துறையூர் அருகே கார்கள் மோதி கொண்டதில் 2 வயது குழந்தையுடன் தந்தை பலியானார். மற்றொரு விபத்தில் மூதாட்டி இறந்தார்.
உறவினர் பிறந்தநாள் விழா
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கரட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 35). இவரது மனைவி சரண்யா (23). இவர்களது மகன் விஷ்ணு தேவ் (2). இந்தநிலையில் மணி குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த எல்லம்மாள் (50), சுகன்யா (28) உள்ளிட்டோர் நேற்று காலை திருச்சியில் உள்ள உறவினர் ஒருவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக ஒரு காரில் புறப்பட்டு வந்தனர்.
தந்தை-மகன் பலி
கார் புலிவலம் வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. இதனிடையே சேலத்தை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் (37) என்பவர் காரில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து விட்டு மீண்டும் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். புலிவலம் அருகே வந்தபோது, இவரது காரும், மணி குடும்பத்தினர் வந்த காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் மணி, அவரது மகன் விஷ்ணு தேவ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எல்லம்மாள், சரண்யா, சுகன்யா, சந்தானகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிக்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை-மகன் இறந்த சம்பவத்தால் கரட்டாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
மற்றொரு விபத்து
துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அம்மணி (65). இவர் நேற்று காலையில் வீட்டில் உள்ள குப்பையை சாலையோரத்தில் கொட்டிவிட்டு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அம்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.